“பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும்” - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!
டெல்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டு தூதரக திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று தூதரகத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு வலிமையான ஒற்றுமையை முதன்மையாக வலியுறுத்திய நாடுகளில் ஒந்துராஸும் ஒன்று. ஆபரேஷன் சிந்தூரின்போது பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது.
பாகிஸ்தானுடனான எங்கள் உறவுகள் மற்றும் நடவடிக்கைகள் கண்டிப்பாக இருதரப்பு ரீதியாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் குறித்து மட்டுமே இருக்கும் என்று பிரதமர் மோடி மிகத் தெளிவாகக் கூறினார். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது.
அவர்கள்(பாகிஸ்தான்) பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை மூட வேண்டும். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியும். பயங்கரவாதத்திற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த பேச்சுவார்த்தைகள்தான் சாத்தியமானவை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை ஒப்பந்தம் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செயல்பாட்டில் இருக்கும். பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.