நாட்டை உலுக்கிய கூட்ட நெரிசல் சம்பவங்கள்!
உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்....
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 2) நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்டமாக 27 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த சம்பவம் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இது முதல் முறையல்ல. கோயில்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. அவ்வாறு சமீபத்திய ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.
- மார்ச் 31,2023: மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள கோயிலில் ராம நவமியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியின் போது, கோயிலில் உள்ள பழங்கால கிணற்றின் மேல் கட்டப்பட்ட ஸ்லாப் இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
- ஜனவரி 1, 2022: காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
- அக்டோபர் 13, 2013: மத்திய பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோயில் அருகே நவராத்திரி விழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பக்தர்கள் கடந்து செல்லும் ஆற்றுப்பாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக வதந்தி பரவியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- ஜனவரி 14, 2011: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு என்ற இடத்தில் பக்தர்கள் மீது ஜீப் மோதியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சபரிமலை பக்தர்கள் 104 பேர் உயிரிழந்தனர்.
- மார்ச் 4, 2010: உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிருபாலு மகாராஜின் ராம் ஜான்கி கோயிலில் மக்கள் இலவச ஆடைகள் மற்றும் உணவுகளை பெற கூடியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் பலியாகினர்.
- செப்டம்பர் 30, 2008: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரி நக உள்ள சாமுண்டா தேவி கோயிலில் வெடிகுண்டு வெடித்ததாக வதந்தி பரவியதால் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் பலியாகினர்.
- ஆகஸ்டு 3, 2008: இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர்மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 162 பேர் உயிரிழந்தனர்.