மாணவியை பள்ளி வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம் - பள்ளி முதல்வர் இடைநீக்கம்!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தி உள்ளார்.
இச்சூழலில் தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது. தனது மகளை வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறிவிட்டு, வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டதாக தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மீது மாணவியின் தாயார் புகார் தெரிவித்துள்ளார்.
பூப்பெய்துவது என்பது இயற்கை நிகழ்வு. இதனைக் கூட புரிந்து கொள்ளாமல் ஒரு கல்வி நிறுவனமே வகுப்பறைக்குள் சிறுமியை அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.