“முத்துவேல் பாண்டியன் வேட்டை தொடங்குகிறது” - ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு!
ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு மற்றும் அனிருத் இசையில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.650 கோடி வசூலித்தது. இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால், படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டது.
அதன்படி இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வீடியோ கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(மார்ச்.10) தொடங்கப்படும் என தகவல்கள் முன்பு வெளியானது.
Muthuvel Pandian's hunt begins!💥 #Jailer2 shoot starts today🌟@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/v72a7wXpDH
— Sun Pictures (@sunpictures) March 10, 2025
இந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “முத்துவேல் பாண்டியன் வேட்டை தொடங்குகிறது, ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியது” என்று குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளது. ஜெயிலர் முதல் பாகத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் ஜெயிலர் 2- ல் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.