ஊறுகாய் தர மறுத்த ஹோட்டல்! ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!
ஊறுகாய் தர மறுத்ததால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சாப்பாடு என்றாலே சந்தோஷப்படாதவர்கள் உலகில் யாராவது இருக்க முடியுமா..? அதே போல சாப்பாட்டில் ஏதாவது குறை என்றால்.. உறவில் விரிசல்.. அடிதடி.. கொலை.. என எந்த எல்லைக்கும்.. செல்வோம் என பல குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதை பரவலாக பார்த்திருக்கிறோம்.
எவ்வளவு சாந்தமான ஆளாக இருந்தாலும்.. ஹோட்டலுக்கு போய் சாப்பாட்டுக்கு உட்கார்ந்ததும்.. ஆர்டர் பண்ணின சாப்பாடு தாமதமானாலோ அல்லது உணவில் ஏதேனும் குறை இருந்தாலோ அவ்வளவு தான்.. பசங்க படத்தில் வரும் வசனம் போல ’இப்ப ஜீவா கைய முறுக்குவான் பாரு.. சட்டை பாக்கெட்டை கிழிப்பான் பாரு’ என்பது போல கடும் கோபத்தில் வெயிட்டரை திட்டித் தீர்த்து விடுவார்கள்.
நவீனகால உணவுப் பிரியர்கள் இது போன்ற பிரச்னையை வேறு விதமாக எதிர்கொள்கிறார்கள். ஸ்விக்கி , சோமேட்டோ போன்ற ஆன்லைன் செயலிகளில் ஆர்டர் செய்யும் வழக்கம் தற்போது கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அப்படி ஆர்டர் செய்யும் போது ஏதாவது குறை இருந்திருந்தாலோ அல்லது ஆர்டர் செய்தவற்றில் ஏதேனும் குறைந்தாலோ, உணவுப் பைகள் பிரித்தோ, உடைந்தோ இருந்தால் அதற்கான இழப்பீட்டை அந்தந்த நிறுவங்கள் வழங்கி விடுகின்றன. மேலும் புகார் செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆஃப்லைனில் அப்படி வசதிகள் இல்லை.
இதேபோல ஒரு சம்பவம் ஹோட்டலில் நடந்துள்ளது. விழுப்புரத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே செயல்படும் பாலமுருகன் உணவகத்தில் 2022ம் ஆண்டு ஆரோக்கிய சாமி என்பவர் 25 சைவ சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளார். மொத்தமாக வாங்கிச் சென்றதால் வீடு சென்ற பார்த்தபோது அதில் ஊறுகாய் வைக்கப்படவில்லை என்பதை அறிந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
ஹோட்டல் நிர்வாகவும் அதற்கு உரிய பதிலளித்து அவருக்கு சிறிய அளவிலான இழப்பீடை கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டது. இதன் பின்னர் கடும் மன உளைச்சலுக்குள்ளான ஆரோக்கியசாமி ‘பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்கப்படவில்லை, ஹோட்டலில் கேட்டால் உரிய பதில் இல்லை.., எனவே தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2022முதல் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சாப்பாட்டில் ஊறுகாய் வழங்காதது குறித்து கேட்டதற்கு முறையாக பதிலளிக்க மறுத்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக 30,000 ரூபாய், வழக்கு செலவிற்காக 5000 ரூபாய் மற்றும் 25 பார்சல்களில் வைக்க வேண்டிய ஊறுகாய்க்கான செலவு 25 ரூபாய் என மொத்தம் சேர்த்து 35ஆயிரத்து 25 ரூபாய் அபாராதம் கட்ட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.