கொட்டி தீர்த்த கனமழை... மதுரையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நீர்!
மதுரையில் இன்று மாலை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து
வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரையில் இன்று மாலை ஒரு மணி நேரம் கன மழையும், அதனை தொடர்ந்து விடாமல் சாரல் மழையும் பெய்து வருகிறது. கோரிப்பாளையம், அண்ணாநகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, சர்வேயர் காலனி, புதூர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பார்க் டவுன், சர்வேயர் காலனி, ஒத்தக்கடை உள்ளிட்ட குடியிருப்பு
பகுதிகளில் மழை வெள்ள நீர் முழுமையாக சூழ்ந்தது. சர்வேயர் காலனி பாரத் நகர்
பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். பாம்பு, பூரான் போன்ற விஷ பூச்சிகள், மழைநீரில் கலக்கும் கழிவு நீர் என பன்மடங்கு அபாயத்தில் தவிக்கின்றனர்.
அருகிலுள்ள கண்மாய், ஓடைகள் முறையாக தூர்வாராமல் இருந்ததும், அதில் ஏற்பட்ட
உடைப்பின் காரணமாகவும் இப்படி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும்,
இதுவரை எந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரவில்லை என புகார்
தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளப்பதிவில் “மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 8.30 மாலை 5.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8cm மழை பொழிந்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.