"தமிழர்கள் மீது பாஜக-வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், 13-ம் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று (மார்ச் 10) தொடங்கியது.
இதில், உரையாடிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.-க்கள் தன்னை சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://x.com/mkstalin/status/1899391232373112941
அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
"2024-ல் பாஜக மத்திய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!"
2025-இல் பாஜக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!"
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பாஜக-வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது. "இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்" எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்!"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.