தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆளுநரின் பேச்சை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் மாளிகை!
தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் பேச்சை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.
2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற எனது தொடர் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் உரையின் பல பகுதிகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு அமர்ந்தார்.
ஆளுநர் ரவி, உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறியதும், ஆளுநர் பேசிய விஷயங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில், இன்று சட்டசபையில் ஆளுநர் பேசியது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் பேசியதை தமிழ் சப்-டைட்டிலுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.