“கல்வி வளாகங்களை காவி மயமாக்கும் நோக்கில் செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும்” - மூட்டா சங்கம் கண்டனம்!
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சுயநிதிக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களின் சங்கம் மூட்டா. தற்போது இந்த மூட்டா சங்கம், மாணவர்கள் மத்தியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி, மாணவர்களையும் அவ்வாறு சொல்ல வைத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மூட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 12.04.2025 அன்று நடைபெற்ற கம்பர் விழா பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மாணவர்களிடையே உரையாற்றும் பொழுது சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்ட மதம் சார்ந்த கோஷத்தை எழுப்பியதோடு மாணவர்களையும் கோஷம் எழுப்புமாறு வலியுறுத்தியது கண்டனத்திற்குரிய செயலாகும்.

ஆளுநரின் இச்செயலானது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து சமூக மக்களும் பயிலக்கூடிய ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் பொறுப்பு மிக்க பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபர் இவ்வாறாக மதம் சார்ந்து பேசுவது என்பது மக்களிடையே குறிப்பாக மாணவர்கள் இடையே மதவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் தூண்டுவதாகவும் கல்விச்சூழலை பாதிப்பிற்கு உள்ளாக்குவதாகவும் அமைந்திருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்படுவது ஏற்புடையதல்ல.
ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு கல்வி வளாகங்களை காவி மயமாக்கிடும் நோக்கில் செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்றும் முட்டா வலியுறுத்துகின்றது” என்று குறிப்படப்பட்டுள்ளது.