“ஆளுநருக்கு வேறு எந்த வழியும் இல்லை... மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துதான் ஆகவேண்டும்” - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்திற்கு ஆளுநர் தடையாக உள்ளதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை எதிர்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பு;
“மசோதாக்களுக்கு ஒப்புதல், அரசாணைகளுக்கு ஒப்புதல் உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்கனவே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் மசோதா விவகாரத்தில் எதுவும் நிலுவையில் இல்லை. அதேவேளையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை. அதேபோல யு.ஜி.சி எதிர்தரப்பாக இணைக்கப்படவில்லை, அப்படி இருக்கும்போது அது தொடர்பாக தன் விளக்கத்தை அளிக்க இயலாது.
நீதிபதிகள்:-
ஆளுநர் - அரசு மோதல் போக்கால் மாநிலமும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். மாநில அரசு செயல்படாமல் முட்டுக்கட்டையாக உள்ளதே. எனவே அதனை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் எந்த வகையிலான மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு ஆளுநர் பரிந்துரைக்கலாம்? என கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு :-
அரசியலமைப்பு தெளிவாக கூறுகிறது. முதல் முறை திரும்ப அனுப்பப்படும் மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் கடந்த 2020 ஜனவரி 13 முதல்
2023 ஏப்ரல் வரை 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டன. அதில் முதலில் 2 மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்கு அனுப்பினார்.
நீதிபதிகள்:-
அதன்பின்னர் 10 மசோதாவை அனுப்பினாரா? அவ்வாறு ஆளுநர் செய்திருக்கக்கூடாது.
தமிழக அரசு :-
ஆளுநரின் இந்த செயல் அரசியலமைப்புக்கு முரணானது. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்காததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசன விதிமுறைப்படி ஆளுநர் நடந்து கொள்வதில்லை. ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர். ஆளுநர் தேவையா என்று வாதங்கள் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிபதிகள் :-
மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டார் என்றால், தற்போது நாங்கள் என்ன நிவாரணம் வழங்க முடியும்?
தமிழக அரசு :-
குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டால் மத்திய அரசின் ஆலோசனை படி குடியரசு தலைவர் முடிவு செய்வார். அதேவேளையில் அரசியல் சாசன விதிமுறை 200படி ஆளுநர் செயல்பட உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி :-
அரசியலமைப்பு சட்டம் 200.ன்படி மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட முடியாது. எனவே பிரிவு 200ன் படி செயல்பட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
நீதிபதிகள்:-
ஒருவேளை மசோதா சரியாக இல்லை என ஆளுநர் கருதினால் என்ன செய்வது?
தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி :-
அவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துதான் ஆகவேண்டும்.
துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்:
ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பல்கலைகழக துணை வேந்தர்கள் நியமனம் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தொடர்பான மசோதாவை தவிர வேறு எந்த மசோதாவையும இரண்டாவது முறையாக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது. ஆண்டுக்கணக்கில் ஆளுநர் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார். "As soon as possible" ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. அரசியல் சாசன விதிமுறைகள் தெளிவாக உள்ளன.
தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி :-
2023ம் ஆண்டு, அரசியல் சாசன படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால் அதன் பின்னரும் ஆளுநர் தாமதம் செய்யும் செயலில் ஈடுபட்டார். பின்னர் 10 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். ஆளுநர் செயல் அரசியல் சாசனத்தை கேலிகூத்தாக்குவதாக உள்ளது.
அரசியல் சாசனம் கால நிர்ணயம் செய்யவில்லை என்பதற்காக ஆளுநர் முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. முதல் முறை மசோதா ஒப்புதலுக்கு வரும்போது அதனை முடிவுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். இரண்டாவதாக மசோதாவை சட்டமன்றத்துக்கு திரும்ப அனுப்பலாம்.
ஆனால் சட்டமன்றம் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல்தான் அளிக்க வேண்டும். மூன்றாவதாக ஒரு முடிவை ஆளுநர் எடுக்க முடியாது. அரசியல் சாசன விதிகளின் கீழ் கூடுதல் option என்பது அவருக்கு இல்லை.
அரசியல் சாசன விதிகள் 200கீழ் முறையான வழிமுறைகளை பின்பற்றவில்லை. அவருக்கு விருப்பமான வழியில் அரசியல் சாசன விதிகளை புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஜனநாயகத்தை கேளிகூத்தாக மாற்றியுள்ளார். ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக சட்டப்பேரவைக்கு கூறுகிறார். இதன் அர்த்தம், மீண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு போய்விட்டது என்பதுதான். இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.
எந்த காரணத்தையும் கூறாமல் மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது சட்ட விரோதம். மேலும் ஏற்கனவே கேசரி ஹந் வழக்கு தீர்ப்பின்படி சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனை கிடப்பில் போடக்கூடாது.
தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்:-
ஆளுநர்கள் செயல்களால் 4 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஆளுநர் திடீரென ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ததாக உத்தரவிடுகிறார். பின்னர் ஊடகங்களுக்கு செய்தி கொடுக்கிறார். இது ஆளுநர், அரசின் ஆலோசனை(council of ministers) இல்லாமல் செயல்படுவதற்கு ஒரு மிக முக்கியமான உதாரணம்.
நமது நாடு அதிபர் ஆட்சி முறையில் இயங்குவது அல்ல. மாறாக ஜனநாயக முறைபடி இயங்குவது ஆகும் (our country is parliamentary form of government not Presidential form of government).
தமிழ்நாடு அரசுத் தரப்பின் வாதங்கள் இன்று நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என நாளைமறுநாள் விசாரணையின் போது தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்னும் 24 மணி நேரம் இருப்பதால், ஆளுநர் அரசியல் சாசனப்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர் தரப்புக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம், ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் larger intrest என்ற அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தது.