10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் - திடீரென விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர்!
திருவண்ணாமலையில் 10 ரூபாய் குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது 5 வயது மகள் காவியா ஸ்ரீ கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கடையில் பத்து ரூபாய் குளிர்பான பாட்டிலை வாங்கி அருந்தியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி மூக்கு, வாயில் நுரைதள்ளி சிறுமி மயங்கியதாக கூறப்படுகிறது. உடனே செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து காவியா ஸ்ரீயின் தந்தை ராஜ்குமார் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டு குளிர்பான மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாட்டில்கள் காஞ்சிபுரத்திலிருந்து வாங்கி வரப்பட்டதால், அதிகாரிகள் அங்கும் சோதனை மேற்கொண்டனர். குளிர்பான கம்பெனி கிருஷ்ணகிரி, நாமக்கல்லிலும் இயங்குவதால் அங்கும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஆக. 13) திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எழில் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியாகும் கடைசி தேதியில் குளிர்பான பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து உடனடியாக அதனை அப்புறப்படுத்த கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினர். அதேபோல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் சாப்பிடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குளிர்பான பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பண்டங்களை வாங்கி கொடுக்கும் போது அரசால் சொல்லப்பட்டுள்ள 13 வகையான அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறதா எனவும், காலாவதியாகும் தேதி மற்றும் தயாரிக்கப்பட்ட தேதிகளை பரிசோதித்து பின்னர் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கும்படி பெற்றோர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.