For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உணவக ஊழியரை சரமாரியாகத் தாக்கி மண்டையை உடைத்த கும்பல் | அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

03:30 PM Dec 17, 2023 IST | Web Editor
உணவக ஊழியரை சரமாரியாகத் தாக்கி மண்டையை உடைத்த கும்பல்   அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன
Advertisement

நேரமின்மையால் ஹோட்டலுக்குள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்காத காசாளரை சரமாரியாகத் தாக்கி மண்டையை உடைத்த கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில், மூலப்பாளையத்தைச் சேர்ந்த தனசங்கர் என்பவர் பரோட்டா சென்டர் நடத்தி வருகிறார். இவரது உணவகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சேது என்பவர் காசாளராக பணியாற்றி வருகிறார். டிசம்பர் 14 ஆம் தேதி பரோட்டா சென்டருக்கு உணவருந்த 4 இளைஞர்கள் கஞ்சா போதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நேரமின்மை காரணமாக காசாளர் சேது அவர்களிடம் உள்ளே அமர்ந்து உணவருந்த முடியாது எனவும், பார்சல் வேண்டுமானால் கட்டித் தருகிறோம் எனவும் கூறுயுள்ளார். அதற்கு பார்சல் வாங்க முடியாது, உள்ளே அமர்ந்துதான் உணவருந்துவோம் என அந்த இளைஞர்கள் காசாளர் சேதுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஒரு இளைஞர் காசாளர் சேதுவை தாக்க முற்பட்டார். உடனே அங்கிருந்த சக ஊழியர்கள் அத்துமீறி செயல்பட்ட இளைஞர்களை, அங்கிருந்து வெளியேற்ற முற்பட்டனர். சம்பவம் குறித்து காசாளர் சேது செல்போனில் தனது உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மீண்டும் உணவகத்திற்குள் நுழைந்த அந்த இளைஞர்கள் கையில் கிடைத்தவற்றை எடுத்து அவரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி, திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த சேதுவை மீட்டனர். பின்னர் சேதுவை உணவகத்திற்கு பின்புறமுள்ள சமயலறை பகுதிக்கு ஊழியர்கள் அனுப்பிவைத்ததாக தெரிகிறது. தாக்குதல் நடத்திய இளைஞர்களை உணவகத்தில் இருந்து மற்றவர்கள் வெளியேற்றிய நிலையில், அப்போது ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் உணவகத்திற்கு பின்புறம் வந்து அங்கிருந்த சேதுவை மீண்டும் தாக்கினர். சமையலுக்காக உரித்து வைக்கப்பட்டிருந்த தேங்காயை எடுத்து அடித்தும், அவர் மீது எறிந்தும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் காசாளர் சேதுவின் மண்டை உடைந்து ரத்தம் சொட்டியது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த சேதுவை, சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று திரும்பிய சேது மற்றும் பரோட்டா சென்டர் உரிமையாளர் ஆகியோர் சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பெரியசேமூர் பகுதியைச் சேர்ந்த தீபுக் நௌலி மற்றும் அவரது 3 நண்பர்கள் கஞ்சா போதையில், இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது. அதனடிப்படையில் தீபுக் நௌலியை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement