கோவை | தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை!
தாய் யானை உயிரிழந்து தெரியாமல் குட்டி யானை தாயை தேடி தனியாக சுற்றி வரும் சம்பவம் காண்போரை கலங்கச் செய்கிறது.
கோவை மாவட்டம், தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 14க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்தது. உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்க தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் வந்து யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில் குட்டியானை ஒன்று தனியாக சுற்றி கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று குட்டி யானையை மீட்டனர். அது பிறந்து 1 மாதங்களே ஆன குட்டி என தெரியவந்தது. அந்த குட்டியை அதன் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்கிடையே, பன்னிமடை காப்புக்காடு பகுதியில் பெண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவலறிந்த கோவை மண்டல வனப் பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் யானை உயிரிழந்தது குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த யானைக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு யானையின் உடல் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "உயிரிழந்த யானை சுமார் 30 முதல் 32 வயதுமிக்க பெண் யானையாகும். இதன் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கீழே விழுந்தது. யானையால் மீண்டும் எழ முடியவில்லை. இதனால் யானையின் மொத்த எடையும் மார்பு பகுதி தாங்கியது. நீண்ட நேரம் எழ முடியாததால் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுஉயிரிழந்துள்ளது. பெண் யானையின் மடியில் பால் வடிகிறது. இதனால் குட்டி யானையின் தாய்தான் இந்த பெண்யானை என்பது தெரியவந்துள்ளது" என்றனர்.