“மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான்!” - ராகுல் காந்தி உறுதி
மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநில பரப்புரையின் போது உறுதி அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பெமட்டரா மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
சுதந்திரத்திற்கு பிறகான மிகவும் புரட்சிகரமான நடவடிக்கை ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை வழங்குதல் குறித்து பேசும்போதெல்லாம் அவர்கள் இந்தியாவில் ஓபிசி மக்களே இல்லை, இந்தியாவில் இருக்கும் ஒரே ஜாதி ஏழை மட்டும்தான் என்று பேசுவார்கள். ஆனால் இந்தியாவில் ஓபிசி மக்கள் உள்ளனர். அவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எந்த அளவில் இருக்கிறது என்று கணக்கெடுப்பு நடத்தி கண்டுபிடிப்போம். அவர்களின் மக்கள்தொகைக்கேற்ப 10, 20 அல்லது 60 சதவீத பங்கேற்பை வழங்குவோம். நரேந்திர மோடி செய்கிறதோ இல்லையோ நமது அரசு சத்தீஸ்கரில் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மத்தியில் ஆட்சி அமைத்ததும் போடப்படும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்புக்கானதாக இருக்கும். ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியின மக்கள் தங்களின் உண்மையான மக்கள்தொகை மற்றும் உண்மையான அதிகாரத்தை அறியும் நாளில் இந்த நாடு மிகப்பெரிய மாற்றம் அடையும். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது புரட்சிகர நடவடிக்கை” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சத்தீஸ்கரில் உள்ள அனைத்து பெண்களின் வங்கி கணக்கிலும் ஆண்டுக்கு ரூ.15,000 வரவு வைக்கப்படும். பெரும் பணக்காரர்களின் கடன்களுக்கு பதிலாக, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப்படும், மழலையர் வகுப்பு முதல் முதுநிலை வரை கல்வி இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்.7 மற்றும் நவம்.17-ஆம் தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு நவம்.7ல் வாக்குப்பதிவு நடைபெற்றதையடுத்து, நவம்.17 அன்று மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்.3-ஆம் தேதி நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.