"உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சென்னையை அடுத்த எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் காட்டப்பட்ட அலட்சியம் தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த தொழிலாளர்களுக்கு தரமான மருத்துவமும், ரூ. 5 லட்சம் நிதி உதவியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.