ஹஜ் பயணத்தில் உயிரிழந்த 4 தமிழர்கள்! சவூதியிலே அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஒப்புதல்!
இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தின்போது உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேரின் உடல்களை சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 14-ல் தொடங்கியது. தியாக திருநாளைக் கொண்டாடும் வகையில் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் இந்தாண்டு உலகம் முழுவதும் இருந்து 18 லட்சம் பேர் குவிந்தனர்.
இந்நிலையில் சௌதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெப்பம் தாங்காமல் 900க்கும் மேற்பட்டோர் தற்போது வரை இறந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரை 80 பேர் வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதய நோய் தொடர்பான பிரச்சனைகளால் மக்கா, அராபத், மினா ஆகிய இடங்களில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த உயிரிழந்தவர்களின் விவரம்;
1. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிக்கா பீவி (73).
2. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மைதீன் பாத்து (73)
3. சென்னையை சேர்ந்த நசீர் அஹமது (40)
4. கரூர் மாவட்டத்தை சேர்ந்த லியாக்கத் அலி (72).