மக்களவை தேர்தல் 2024 | அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு!
நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பிரஷர் குக்கர் சின்னம் மீண்டும் ஒதுக்கீடு செய்துள்ளது.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமமுக தேர்தலில் போட்டியிடுகிறது. பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், அமமுகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், இரண்டு தொகுதியில் ஒரு தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளார் என கூறப்பட்டு வருகிறது. மேலும், டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. வரும் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிடிவி தினகரன், தேனி தொகுதியில் இருந்து தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.