’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர், கடந்த மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக அரசு தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். அத்துடன் கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பாக சில‘ஆதாரங்களையும்’ அவர், வெளியிட்டாா்.
இந்த இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "இந்திய அரசமைப்பின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படுவதன் மூலமே அங்கீகரிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, தேர்தல் ஆணையம் இதே அரசியல் கட்சிகளிடம் எப்படிப் பாகுபாடு காட்ட இயலும்? தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரையில், அனைவரும் சமமே. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும் தேர்தல் ஆணையத்துக்கு அதுவொரு பொருட்டல்ல. தேர்தல் ஆணையம் தமது அரசமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது” என்றார்.
மேலும் பிகார் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”பீகார் வாக்காளர் திருத்தத்தின் போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஆகியோர் ஆவணங்களை சரிபார்த்து கையொப்பமிட்டனர். மேலும் வீடியோ சான்றுகளையும் சமர்ப்பித்தனர். சில கட்சித் தலைவர்களால் குழப்பத்தை பரப்ப ஒரு முயற்சி இங்கு நடைபெறுகிறது.
"பீகாரில் ஏழு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் நிற்கும்போது, அதன் நம்பகத்தன்மை குறித்து எந்த கேள்விக்குறியும் எழுப்ப முடியாது” என்று தெரித்தார்.
அடுத்ததாக வாக்கு திருட்டு குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர்,"ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் நிலை முகவர்கள் மற்றும் 20 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு வெளிப்படையான செயல்பாட்டில், எந்த வாக்காளரும் வாக்குகளைத் திருட முடியுமா?". “சில வாக்காளர்கள் மீது இரு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அதற்கான ஆதாரம் இருப்பின் அளிக்கலாம் என்று நாங்கள் கேட்டோம். ஆனால், இதுவரை அதற்கான பதில் இல்லை.வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்புக்கு அவமரியாதை.
தேர்தல் ஆணையமோ அல்லது எந்தவொரு வாக்காளரோ இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைப் பார்த்து பயப்படவில்லை. இந்தியாவின் வாக்காளர்களைக் குறிவைத்து அரசியலில் ஈடுபடும்போது, அதிலும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்துவதாக அமையும்போது, இன்று, ‘தேர்தல் ஆணையம் அச்சத்திற்கு இடமின்றி பாறை போல உறுதியாக அனைத்து வாக்காளர்கள், அதாவது, அனைத்து பிரிவுகள், மதங்கள் அவற்றிலுள்ள ஏழைகள், செல்வந்தர், மூத்தவர், இளையோர், பெண்கள் என எவ்வித பாகுபாடின்றி உறுதுணையாக அவர்களுடன் நிற்கிறது, இனியும் நிற்கும்’ என்றார்
தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் பற்றி பேசிய அவர்,“கடந்த 20 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப் பட்டவில்லை. இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை இதனை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களைவதே இதன் முக்கிய குறிக்கோளாகும். அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் அதிகமாக பெறப்படும்போது, இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தொழில்நுட்ப வசதி பெருமளவில் இல்லாததால், இடம்பெயர்ந்தவர்கள் பலரது பெயர்கள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று, இணையதள வசதி உள்ளது. இணையதள முகவரியில் பதிவு செய்யும் வசதி வந்துள்ளது. இதனால், இந்த செயல்பாடுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. எனினும், அவசரகதியில் இதனை செயல்படுத்தினால், எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுபட்டு அல்லது நீக்கப்பட்டுவிடும் அபாயமும் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது” என்றார்.