மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா மற்றும் வட இந்தியவிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இக்காலகட்டத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு இருமுடி கட்டியபடி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார்.
இதனை தொடர்ந்து நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். நடப்பு சீசனையொட்டி டிசம்பர் 27 ம் தேதி வரை மண்டல பூஜையும் அதன் பின் ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.