“திமுக 5வது ஆண்டில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான்” - இபிஎஸ் விமர்சனம்!
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (ஏப்ரல்.02) கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலமாக கச்சத்தீவு மீட்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தீர்கள்? வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தபோது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? என எதிர்க்கட்சியினருக்கு கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “மத்தியில் 5 பிரதமர்கள் ஆட்சியில திமுக-வை சேர்ந்த எம்.பிகள் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தும் 16 ஆண்டுகளாக ஏன் கச்சத்தீவு பிரச்னை தீர்க்கப்படவில்லை. ஏன் கச்சதீவை மீட்ட முயற்சி எடுக்கவில்லை என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். முழுமையாக பேச அனுமதிக்கவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால், அந்த தேர்தலையொட்டி திமுக கட்சி இந்த தீர்மானத்தின் மூலமாக நாடகத்தை அரங்கேற்றுகிறது.
திமுக உண்மையிலேயே மீனவர்களுக்கு துரோகம் செய்தது. தேர்தலை நோக்கி தான் இந்த தீர்மானத்தை திமுக கொண்டுவந்துள்ளது. மீனவர்களின் வாக்குகளை பெறுவதற்கு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நாங்கள் எண்ணுகிறோம். நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் மீது அக்கறை இல்லையா? திமுக 5 வது ஆண்டில் கச்சத்தீர்வு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றுவதற்காகதான்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு மீட்பு குறித்து அழுத்தம் தரவில்லை? மீனவர்களின் உரிமை பறிபோகும் என்று நாங்கள் கச்சத்தீவு தாரை வார்க்கப்படுவதை எதிர்த்தோம். கச்சத்தீவு மீட்புக்காக கடந்த 2008 ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க அதிமுக முயற்சித்து வருகிறது”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.