“மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டுகிறது!” - பிரதமர் நரேந்திர மோடி
மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், கூட்டணிக் கட்சியின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். நந்தனம் பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டுகிறது. திமுக அரசு கொள்ளையடித்த பணம் மீட்கப்படும். இது, தான் தரும் உத்தரவாதம். மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைகிறது. சென்னை வெள்ளத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளம் வந்த சமயத்தில் திமுக அரசு முறையாக பணியாற்றவில்லை. சென்னை மக்களின் தேவைகளை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. சென்னையில் வெள்ள நீர் மேலாண்மையை சரியாக செயல்படுத்தவில்லை.
ஏழைகள் நலனை கருத்தில்கொண்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்களுக்கு தானியங்கள் வழங்கினோம். மத்திய அரசின் திட்டத்தால் திமுக கொள்ளையடிக்க முடியாமல் உள்ளது. நாட்டு மக்களை கருத்தில் கொண்டு நான் அரசியல் செய்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.