"எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு" - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சென்னை விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு விழாவில் மாநில நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் அரசு என்றால் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சென்றால் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்கு அரசு பேருந்துகளே சென்றன. ஆனால் எதிர்கட்சிகள் பேருந்துகளுக்கு தடை விதிக்கின்றனர். கொடி, பேனர் அதிகமாக வைக்க கூடாது என்று கூறுகின்றனர். திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என்றால் ஆட்கள் நடமாட முடியாத அளவிற்கு பேனர்கள் வைக்கின்றனர்.
சமூக வலைதளத்தில் ஆளும் கட்சியை பற்றி ஏதாவது போட்டால் கைது செய்து வேலூர் அல்லது கடலூர் சிறையில் அடைக்கின்றனர். இதனால் தான் திமுக அரசு இருக்க கூடாது என்று கூறுகிறோம். மோடி தாயார் பற்றி பேசியதை கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளோம். இந்தியா கூட்டணியில் எல்லா கட்சிகளுக்குமே வழி முறையோ எப்படி பேச வேண்டும் என்பது தெரியாது. மோசமான நிலையில் இந்தியா கூட்டணி உள்ளது.
பாஜக கட்சி தினம் தினம் மக்களை சந்தித்து வருகிறது. பிரதமர் மோடி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைத்து கொண்டு இருக்கிறார். உள்துறை அமைச்சரும் உழைத்து கொண்டு இருக்கிறார். அடுத்தவர்கள் எந்த கிழமைகளில் போகிறார்கள் என்று கருத்து சொல்ல முடியாது. இளையராஜா பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் எதுவும் இல்லை. விஜய் பற்றி பேசும் சீமானிடம் தான் கேட்க வேண்டும். நான் கருத்து சொல்வதற்கில்லை" என்று தெரிவித்துள்ளார்.