4 நாட்களில் 12 மாவட்ட மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!
திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பிப்ரவரி 5-ம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறும் பணியை தொடங்கி உள்ளது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது.
பிப்ரவரி 5-ம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், பிப்ரவரி 6-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ம் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பரிந்துரைகளை வழங்கினர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று (பிப். 9) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை சந்தித்தனர். ஓசூரில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். அதில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச்செயலாளர் தே.மதியழகன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச்செயலாளர் ஒய்.பிரகாஷ், தருமபுரி கிழக்கு மாவட்டச்செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, தருமபுரி மேற்கு மாவட்டச்செயலாளர் பெ.பழனியப்பன், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.