தமிழ்நாட்டிற்கு தினமும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு - சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திட்டவட்டம்!
தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு
வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 11ம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு, கர்நாடகா அரசு வழங்க வேண்டிய நிலுவை தண்ணீரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
தமிழ்நாட்டின் முறையான கோரிக்கையை ஏற்ற காவிரி ஒழுங்காற்று குழு, கர்நாடகா அரசு காவிரியில் இருந்து 12ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாள் தோறும் 1 டி.எம்.சி
தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்று முன் தினம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் அடிப்படையில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது எனவும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி, பாஜக சார்பில் எதிர்கட்சித் தலைவர் ஆர்.அசோக் குமார், முன்னாள் முதலமைச்சர் சதானந்தா கவுடா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தினமும் 1டி.எம்.சி டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவு குறித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தில் மேல் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இறுதியில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.