Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் - சீமான்...!

கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளைவ் அகற்றும் முடிவை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
08:54 PM Nov 19, 2025 IST | Web Editor
கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளைவ் அகற்றும் முடிவை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Advertisement

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

”கரூர், வெண்ணைமலை பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேல், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளைக் கோயில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசு அகற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் அருகேயுள்ள 550 ஏக்கர் நிலங்களில் ஏறத்தாழ 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு என்றுகூறி வீடுகளை விட்டு அம்மக்களை திமுக அரசு வெளியேற்ற முயல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

கோயில்கள் நிறைந்த கரூர் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் ஜமீன் உரிமை வழங்கப்பட்டுக் கோயில் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஜமீன் உரிமை பெற்றிருக்கும் தேவஸ்தானத்திற்குக் குறிப்பிட்ட நிலங்களின் மேல் வரிவசூல் செய்யும் உரிமையானது 1802 முதல் சட்டப்படி வழங்கப்பட்டிருந்தது. குடியிருக்கும் உரிமையானது அனுபவத்திலிருந்த விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்டு, தேவஸ்தானத்திலிருந்து ஒவ்வொரு வருவாய் வருடத்திற்கும் வரி வசூல் செய்யப்படுவதோடு, விவசாயிகளுக்குப் பட்டா வழங்கப்பட்டுப் பத்திரப்பதிவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு விடுதலை பெற்ற பிறகு நில சீர்திருத்தச் சட்டங்கள், ஜமீன் ஒழிப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு குடி உரிமை பெற்றிருந்த விவசாயிகளுக்கு நில உரிமையை முழுமையாக்க வழிவகைச் செய்யப்பட்டது. ஆனால் தேவஸ்தான நிர்வாகிகள் சிலர் மக்களின் அறியாமையினைப் பயன்படுத்தி, நில சீர்திருத்தச் சட்டங்களின் பலன்கள் மக்களைச் சென்றடைய விடாமல் தடுத்து விட்டனர். அதன் காரணமாக அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் சட்டப்படி பட்டா பெற உரிமை பெற்றிருந்தும் இன்றுவரை பட்டா பெற முடியாமல் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திச் சிலர் உள்நோக்கத்துடன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திமுக அரசு வலுவான வாதங்களை முன்வைக்கத் தவறியதன் காரணமாக, அவ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று முடிவு செய்த நீதிமன்றம் குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இதனையடுத்து மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க நீதிமன்றத்தில் சரியான வாதங்களை வைக்கத் தீவிரம் காட்டாத திமுக அரசு, நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி மக்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற வீடுகளுக்கு முத்திரை வைக்கும் பணியை அதிவேகமாகச் செய்துவருவது, இந்த அரசும் ஆட்சியும் யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது.

கரூரில் கோயில் நில ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அகற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட்டு, குடியிருப்புகளை அகற்றும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறன். தங்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வெண்ணைமலை பகுதி மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவை அளித்துத் துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
karurlatestNewsNTKSeemanTNnewsvennamalai
Advertisement
Next Article