For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

05:49 PM May 06, 2024 IST | Web Editor
“மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும்  தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்
Advertisement

மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சர்வ தர்ஷித் மற்றும் அவருடன் பணியாற்றி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன் ஷாம், வெங்கடேஷ், சாருகவி, காயத்ரி, நேசி ஆகிய 6 பேரும் நாகர்கோவில் வந்தனர்.

இவர்கள் 6 பேரும் இன்று (மே 6) காலை திற்பரப்பு அருவிக்கு சென்றனர். அருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்ததால் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலை அடுத்த கணபதிபுரம் லெமூர் கடற்கரைக்கு வந்தனர். அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது ராட்சத அலை அவர்கள் 6 பேரையும் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

பறக்கையைச் சேர்ந்த சர்வதர்ஷித் மற்றும் நேசி ஆகிய 2பேரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்களது சடலம் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்வதர்ஷித் சிகிச்சை பலனின்றி பலியானார். நேசி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சுற்றுலா வந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலியான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில்,

“5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement