‘விடுதலை - 2’ படத்தின் வெற்றியை கொண்டாடிய படக் குழுவினர்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2 படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
இயக்குநரான வெற்றிமாறனுக்குத் தனி ரசிகர்களின் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல மாஸ்டர் பீஸ் படங்களை ரசிகர்களிடம் கொண்டு வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். தற்போது விடுதலை 2 திரைப்படம் டிச.20 அன்று திரையரங்குகளில் வெளியானது.
நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து முக்கிய கதாபாத்திரத்தில் இயக்கியுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், தற்போது வெளிவந்த விடுதலை 2 திரைப்படமும் பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய வணிக வெற்றி சாத்தியமாகவில்லை. இருப்பினும், இப்படம் ரூ.50 கோடி வரை வசூலித்து வணிக தோல்வியிலிருந்து மீண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
விடுதலை முதல் பாகத்தில் சூரியின் குமரேசன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்த வெற்றிமாறன், அதன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி நடித்துள்ள பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார். இப்படத்திற்கும் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை பக்கபலமாக இருந்தது.
விடுதலை 2 படத்தின் வெற்றி விழாவில் சூரி மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் வெற்றிமாறன் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள், படக்குழுவினர்கள் கலந்துகொண்டனர். அப்போது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வெற்றிமாறனுக்கு மாலையை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின்றன.