”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற கூற்று தவறானது”- திருச்சி சிவா பேட்டி!
கடந்த 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளகளை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என ஆளும் கட்சியினர் கூறுவது தவறானது. குறிப்பாக தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ அறிவிப்பின் படி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சுமார் 1 கோடி பேர் வாக்குரிமையை இழந்துள்ளனர்.ஆதார் அட்டை ஆவணமாக ஏற்காமல் , பிறப்பு சான்றிதழ் கேட்பதால் இதுபோன்ற குழப்பம் நிலவுகிறது. மேலும் தேர்தல் ஆணையத்துக்கு குடியுரிமையை தீர்மானிப்பதற்கு அதிகாரம் கிடையாது. நீக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளுடைய வாக்குகளாக இருக்கும் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. எனது இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை வைக்கிறோம். ஆனால் அது தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுகிறது.
ஒரு அரசாங்கத்தை தீர்மானிப்பது வாக்குரிமை அது தொடர்பாக தான் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறுகிறோம். இன்று பிகாரில் நடைபெற்றது நாளை தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தான் SIR தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதேபோன்று அறையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பும்போது அவைக்கு சி.ஐ.எஸ்.எப் காவலர்களைக் கொண்டு தடுக்கிறார்கள். பெண் உறுப்பினர்கள் என்று பாராமல் மல்லுகட்டுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவமரியாதையாக நடத்தப்படுகிறார்கள். எனவே இது தடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட ஒரு விவகாரத்தை எழுப்பி அது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்பது ஜனநாயக பூர்வமானது. தவிர அது ஜனநாயக விரோதமானது அல்ல.
நாடாளுமன்றத்தில் எங்களுடைய குரல்கள் ஒலிக்க உரிய நேரம் கொடுப்பதில்லை அல்லது முற்றிலும் நிராகரிக்கப்படுகிறோம். எனவே தான் ஊடகம் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நாங்கள் ஊடகத்தின் முன்பாக முறையிடுகிறோம்.மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்களை யார் நாடாளுமன்ற அவைக்குள் அனுமதித்தது? நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே பாதுகாப்புக்காக நின்ற சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் தற்போது மார்ஷல் உடையில் அவைக்குள்ளாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றம் என்பது அரசு பதில் அளிக்க வேண்டிய இடம். ஆனால் அரசின் ஒரு அங்கமாகிய உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் இயங்கும் சிஐஎஸ்எப் பிரிவு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களையே அவமரியாதையாக நடத்துகின்றனர்”
என்று தெரிவித்தார்.