#Rajasthan | கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை! கைதுக்கு முன் நடந்த பாசப்போராட்டம்!
ராஜஸ்தானில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தை, கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுது பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சங்கனேர் சதர் பகுதியைச் சேர்ந்த 11 மாத குழந்தை பிருத்வி கடந்தாண்டு ஜூன் மாதம் காணாமல்போனார். அவரது பெற்றோர் இது குறித்து போலீசாருக்கு புகார் அளித்தனர். போலீசார் இதனை கடத்தல் வழக்காக பதிவு செய்து இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தையை கடத்திய தனுஜ் சாஹர் விருந்தாவனத்தில் உள்ள யமுனை நதிக்கு அருகில் ஒரு குடிசை வீட்டில் துறவியாக வசித்து வருவது தெரியவந்தது.
இதனையடுத்து, விருந்தாவனத்தின் யமுனை நதிக்கரையில் வசித்து வந்த தனுஜை கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் துறவிகள் போல் உடையணிந்து, அப்பகுதியில் தங்கி குற்றவாளியை கண்காணித்து வந்தனர். பின்னர் கடந்த 27ம் தேதி தனுஜ் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது, அவர் கடத்தப்பட்ட குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயன்றிருக்கிறார்.
இருப்பினும், அவரை 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்க முயன்றபோது, கடத்தியவரை பிரிய மனமில்லாமல் குழந்தை கதறி அழுதது. கடத்தியவரும் கண்களும் கலங்கியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட குழந்தை 14 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, "குற்றஞ்சாட்டப்பட்ட தனுஜ் சாஹர் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். இவர் உத்தரபிரதேசத்தின் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தார். அதோடு, தனுஜ் உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். ஆனால், தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால், அவருக்கு காவல்துறை நடைமுறைகள் நன்கு தெரிந்திருந்தது. இதன்காரணமாக அவர் செல்போனை பயன்படுத்தாமல், அடிக்கடி தான் இருக்கும் இடத்தையும் மாற்றி இருக்கிறார். மேலும், அவர் ஒருவரை சந்தித்தால் மீண்டும் அவரை சந்திப்பதை தவிர்த்துள்ளார். தனது அடையாளத்தை மறைக்க நீண்ட தாடி வளர்த்த அவர், சில நேரங்களில் அந்தத் தாடிக்கு வெள்ளை நிறம் பூசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், கடத்தப்பட்ட பிருத்வியை தன் மகனாகக் கருதி வளர்த்து வந்துள்ளார். இதனால்தான் அந்த குழந்தை அவரைவிட்டு பிரிய மனமில்லாமல் அழுதது." இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.