For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் - அதிகாரிகளுடன் #ChiefSecretary முருகானந்தம் ஆய்வு!

06:53 AM Aug 20, 2024 IST | Web Editor
மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்   அதிகாரிகளுடன்  chiefsecretary முருகானந்தம் ஆய்வு
Advertisement

தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட முருகானந்தம், நேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை மற்றும் சுகாதாரத்துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.

Advertisement

2021ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மத்திய அரசுப் பணியில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். பின்னர், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்றதால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிவ் தாஸ் மீனாவுக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஷிவ்தாஸ் மீனாவின் பணிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழலில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நேற்று நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட முருகானந்தம், நேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை மற்றும் சுகாதாரத்துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில் அவர் வழங்கிய அறிவுறுத்தல்கள்,

"அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் இணைந்து பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்படும். இந்த தணிக்கையின் மூலம், பாதுகாப்பு ஏற்பாடுகளின் தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து, மேம்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழியவேண்டும்.

சென்னை மற்றும் பிற காவல் ஆணையர் அலுவலகங்களில் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்டங்களில், காவல்துறை கண்காணிப்பாளர்கள் இந்தத் தணிக்கை குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர்களும் இதில் பங்கேற்பார்கள்.

மருத்துவ மனைகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவிக்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் அவற்றின் காட்சிப்பதிவுகளை மத்தியக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனையின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும், குறைந்தது ஒரு மாத சேமிப்புத் திறன் கொண்ட போதிய எண்ணிக்கையிலான சிசிடிவிக்களை நிறுவி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மருத்துவமனை நிர்வாகம் வார்டுகள், வழித்தடங்கள், பணி அறைகள் மற்றும் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் சரியான முறையில் விளக்குகள் பொறுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஒப்பந்தப் பாதுகாப்பு பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையின் மூலம் கண்காணிக்க வேண்டும்.

மேலும், அவர்கள் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி பெற வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள புறக்காவல் நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இருக்க வேண்டும். காவலர்கள் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொள்ளவேண்டும்" எனத் தெரிவித்தார்.

அனைத்து மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் அவசர உதவி தேவைப்படும்போது காவல் உதவி செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகச் செய்தி அனுப்பலாம் என காவல்துறை தலைமை இயக்குநர் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர். காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement