Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு: தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!

03:48 PM Dec 12, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தார். தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு, டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தடைந்தது. இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

வெள்ள பாதிப்புகள் குறித்து அவர் உள்ளிட்ட அதிகாரிகள் மத்தியக் குழுவினரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, மத்தியக் குழுவினர் இன்று மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மற்றொரு குழுவினர் வட சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்தியக் குழுவினர் பேசியது:

“மிக்ஜம் புயல், வெள்ள பாதிப்புகளை மிகச் சிறப்பாக கையாண்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். அதிக அளவிலான மழை பெய்ததால் தண்ணீர் தேங்கியது. தமிழ்நாடு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்த போதிலும், எதிர்பாராத விதமாக புயல் சென்னை அருகே நீண்ட நேரம் மையம் கொண்டதால் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டை ஒப்பிடும்போது மிக விரைவாக இயல்பு நிலைக்கு சென்னை திரும்பியுள்ளது. அரசின் நடவடிக்கையால் உயிர் சேதம் மிகவும் குறைந்துள்ளது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.” என்று மத்திய குழு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, நாளை மறுநாள்(டிச. 14) மத்தியக் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்த பின்னர் டெல்லி திரும்புகிறது.

Tags :
Central teamChennaiCycloneHeavy raininspectionMichaungNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article