"விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரானது.. அதனை அதே வடிவில் ஏற்கமாட்டோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
கலைஞர் கைவினைத் திட்டம் என்பது சமூக நீதியை, சம நீதியை, மனித நீதியை, மனித உரிமை நீதியை நிலைநாட்டும் திட்டம். கலைஞர் கைவினை திட்டத்தில் 25 தொழில்கள் அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டமில்லை. விஸ்வகர்மா திட்டத்தில் இணைவதற்கு 18 வயது முதல் அனுமதி என்ற வயதினை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 18 வயது என்பது ஒருவர் உயர்கல்வி பயிலும் வயதா? அல்லது குலத்தொழிலை செய்யும் வயதா?
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரானது. அதனை அதே வடிவில் ஏற்கமாட்டோம். விஸ்வகர்மா திட்டம், மாணவர்களை கல்வியை விட்டு வெளியேற்றும் திட்டம். சாதிய பாகுபாடு நிறைந்த இந்தியாவில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டத்தை எப்படி ஏற்பது? மனசாட்சி உள்ள யாரும் விஸ்வகர்மா திட்டத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். விஸ்வகர்மா திட்டத்தில் விண்ணப்பிக்கும் வயதை 35 ஆக உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன். தாம் எடுத்துரைத்த 3 திருத்தங்களை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.