“நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அடிப்படையில் முறைகேடு நடந்தது தொடர்பாக குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு ஓஎம்ஆர் தாள்களை (விடைத்தாள்) கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக கூறி, கோத்ராவில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தின் தலைவர் உட்பட ஐந்து பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர் என்று, பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு முறைக்கு மாற்று அவசர தேவையை இந்த செய்தி சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
“பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்காக அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக நீட் தேர்வு அந்த வாய்ப்பை தடுத்துக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வினால் மாணவி அனிதா உள்ளிட்ட எண்ணற்ற மாணவர்கள் பரிதாபமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு மோசடி என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.