For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

08:16 PM Feb 26, 2024 IST | Web Editor
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Advertisement

கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்

“சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை.

முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது.

கீழடியில் தற்போது 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (பிப். 26) விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்” என்றார். இதையடுத்து ”கீழடி அகழாய்வு அறிக்கைகளை மத்திய அரசு 9 மாதங்களில் வெளியிட வேண்டும். வழக்கு முடிக்கப்படுகிறது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Tags :
Advertisement