மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு ஒளிந்துகொள்ளக்கூடாது - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு ஒளிந்து கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மைக்கான படைவீரர் அமைப்பு
(Veteran forum for Transparency in public life) சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் பொது சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, அது செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சை கட்டண நிர்ணய விவகாரம் தொடர்பாக மாநில அரசுகளிடம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக "மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2010ஐ" அமல்படுத்துவது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது, அது தொடர்பாக 12 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசமும் மட்டுமே மேற்கொண்டுள்ளன.
பிற மாநிலங்கள் தரப்பிலிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை, அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டண பட்டியலை வகுக்க முடியவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காரணத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள்...
"மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2010" என்பது நாட்டின் அனைத்து குடி மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான சிகிச்சை கிடைக்க வழி வகை செய்ய இயற்றப்பட்ட சட்டம் ஆகும்.
ஆனால், மத்திய அரசு மேற்கூறிய காரணத்தை வைத்து, தனியார் மருத்துவமனையிலும் குறைந்த விலையில் மருத்துவ சேவை கிடைக்க வழிவகை செய்யும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு ஒளிந்துகொள்ளக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கட்டணம் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அப்படி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்காதபட்சத்தில், மத்திய அரசின் பொதுச்சுகாதார திட்டத்தின் (CGHS) கீழ் ஏற்கனவே இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு என்ன கட்டணம் வகுக்கப்பட்டுள்ளதோ அதனையே அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்குமான சிகிச்சை கட்டணமாக நிர்ணயித்து உத்தரவிடுவோம் என எச்சரித்தனர். இதனையடுத்து வழக்கை 6 வார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.