Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!

மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11:04 AM Apr 04, 2025 IST | Web Editor
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சத்யாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

மாணவி சத்யா ஏற்கனவே 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், நீட் தேர்வையும் எழுதியுள்ளார். அதில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்காக சேலம் ஜலகண்டாபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இம்முறையும் தம்மால் அதிக மதிப்பெண் பெற முடியாதோ என்ற அச்சத்தில் கடந்த 31-ஆம் தேதி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்யா நேற்று உயிரிழந்திருக்கிறார்.

நீட் தேர்வு மருத்துவப் படிப்பை ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுகிறது என்பது மட்டுமின்றி, அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்ததற்கு இது தான் காரணம் ஆகும். நடப்பாண்டில் மட்டும் கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு மாதத்தில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மானவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட பயன்கள் என்ன? பாதிப்புகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்திருந்தால், மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை உனர்ந்து அதை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கும்.

ஆனால், மத்திய அரசு அத்தகைய ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அதன் மீது தொடர் நடவடிக்கை எடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்யவில்லை.

நுழைவுத்தேர்வுகள் மாணவர்களின் உயர்வுக்கு வகை செய்ய வேண்டும். மாறாக மாணவர்களின் உயிர்களை பறிப்பதாக இருக்கக்கூடாது. மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதே நேரத்தில், கல்வியை விட உயிர் பெரிது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சிகளை மாணவச் செல்வங்கள் கைவிட வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Anbumani RamadossCentral governmentneet examstudents
Advertisement
Next Article