மதுரை, கோவை #Metro திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு?
கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கைகளில் மாறுதல் கோரி, அதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதேபோல கோவையில் அவிநாசி சாலை முதல் கருமத்தம்பட்டி வரை 39 கி.மீ. தொலைவுக்கு 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கி இருந்தது.
இத்திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை படிப்படியாக தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய சார்பில் உள்ள மெட்ரோ நிர்வாக குழு இந்த திட்ட அறிக்கையில் சில மாறுதல்களை செய்ய கூறி திட்ட அறிக்கையை திரும்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 936 பக்கங்கள் கொண்ட மதுரை திட்ட அறிக்கை மற்றும் 655 பக்கங்கள் கொண்ட கோவை திட்ட அறிக்கை திருப்பி அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரு மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம், தமிழ்நாடு அரசு கடன் கோரியது. பல்வேறு பணிகளுக்கு நிதியுதவி அளித்து வரும் இந்த வங்கி, மதுரை மற்றும் கோவையில் செயல்படுத்தும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் நிதியுதவி அளிக்க முன்வந்தது. அந்த வகையில், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு செலவிடும் தொகை, இரு வழித்தடங்களில் உத்தேசமாக எத்தனை பயணிகள் பயணிக்க வாய்ப்பிருக்கிறது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய், கொடுக்கும் கடன் தொகையை எத்தனை ஆண்டுகளுக்குள் திருப்பிக் கொடுக்கப்படும் உள்ளிட்டவை முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே மத்திய அரசு கூறியுள்ள மாறுதல்கள் செய்யப்பட்டு மீண்டும் மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்ப மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்பிறகே கோவை மற்றும் மதுரை இடையே மெட்ரோ ரயில் அமைப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படவுள்ளது.