“நாடாளுமன்றத்தை காற்றோட்ட அறையாக மத்திய அரசு பயன்படுத்துகிறது” - மக்களவையில் கொதித்தெழுந்த ஆ.ராசா!
நாடாளுமன்றத்தில் மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் பேசிய ஆ.ராசா,
“மத்திய அமைச்சரின் பேச்சும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆவணங்களும் ஒன்றுபோல் சரியாக இருந்தால் நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். வக்ஃபு வாரிய விவகாரத்தில் முழுமையான உண்மைகளை அரசாங்கம் கூறவில்லை.
திருச்சி பகுதியில் உள்ள பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்கள் முழு கருத்தையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக வழங்கினார்கள். ஆனால் கூட்டுக்குழு முழுமையாக அதனை நிராகரித்துள்ளது. 1970ல் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1984 வக்ஃபு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதன் பின்னர் 1995ம் ஆண்டு இஸ்லாம் மதத்தினர் கோரிக்கை படி இரண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. 2013ஆம் ஆண்டும் சில திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.
தற்போது எந்த பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது?. வக்ஃபு சொத்துகளின் சர்வே, பதிவு குறித்து கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் கேலி கூத்தாக உள்ளது. உண்மைத்தன்மை மற்றும் வெளிப்படை தன்மை பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நீங்கள் கவலைப்படுவதெல்லாம் மதத்தைப் பற்றி மட்டும் தான். 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினால்தான் நன்கொடை என்பது, நேர்மையாக நன்கொடை அளிப்பவர்களுக்கு எதிராக உள்ளது.
அரசுக்கு மதம் மட்டும்தான் பிரச்னையாக உள்ளது. அரசு சொத்துக்கள் என்று முடிவு செய்யும் அதிகாரம் முழுதும் அரசிடம் உள்ளது, இது ஆபத்தானது. மாவட்ட ஆட்சியர் சர்வே நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. இது எப்படி ஏற்புடையது?. வக்ஃபு சொத்து பதிவு செய்வதில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் சரியானது அல்ல. பிரச்னைகள் இருந்தால் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரே பதிவு செய்ய முடியும். மேல் முறையீடு செய்ய முடியாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
இந்த நாடாளுமன்றத்தை வெறும் ஒரு காற்றோட்ட அறையாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறேன். இது அரசியலமைப்பின் மீதான மன்னிக்க முடியாத தாக்குதல் என்பதை தவிர வேறு ஒன்றும் கூற முடியாது. வக்ஃபு வாரிய விவகாரத்தில் முழுமையான உண்மைகளை அரசாங்கம் கூறவில்லை.
தமிழ்நாடு சட்டப்பேரவை மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வக்ஃபு சொத்து பதிவு செய்வதில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் சரியானது அல்ல. பிரச்னைகள் இருந்தால் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரே பதிவு செய்ய முடியும். மேல்முறையீடு செய்ய முடியாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை, கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தற்போது இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக சேர்க்கும் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்” என தெரிவித்தார்.