“வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி வழங்கவில்லை!” - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
தென்மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு முழுமையான நிதி வழங்கவில்லை என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு கனிமொழி எம்பி நிவாரண உதவிகளை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு கணக்கு எடுக்கும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும். மழை வெள்ளத்தால் ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளன. விளைநிலங்கள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் உடைந்துள்ளன, இதே போன்று நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், மழைநீர் வடிந்து சில இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மழைநீர் வடியாத இடங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஒன்றிய அரசு முழுமையான நிதி வழங்கவில்லை. ஹெலிகாப்டரிலிருந்து உணவு வழங்கும் போது பொருள் சேதமாகத்தான் செய்யும். வாகனம் மூலம் செல்ல முடியாத பகுதிகளுக்கு வேறு வழியில்லாமல் தான் ஹெலிகாப்டரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.