உத்தரப்பிரதேசத்திற்கு 22, தமிழ்நாட்டுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள்! - நாடு முழுவதும் 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி!
நாடு முழுவதும் புதிதாக 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும், புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி, அதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்டன. மொத்தம் 170-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 113 விண்ணப்பங்கள் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், 58 விண்ணப்பங்கள் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக என்எம்சி தெரிவித்திருந்தது.
அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 14, ராஜஸ்தான் மாநிலத்துக்கு 12, தெலங்கானாவில் 11 மருத்துவக் கல்லூரிகள், மேற்கு வங்கத்தில் 8, மத்தியப் பிரதேசத்தில் 7,ஆந்திரத்துக்கு 7, கர்நாடகவிற்கு 5, தமிழ்நாட்டிற்கு 5, கேரளாவிற்கு 2 மருத்துவக் கல்லூரிகளும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்திற்கு மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா, குஜராத் மாநிலங்கள் தலா இரண்டு கல்லூரிகளும், ஹரியானா, டெல்லி, அசாம், பஞ்சாப், சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் (என்எம்சி) விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றை ஆய்வு செய்து அதன்பேரில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் ஓங்கூா் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், அவனம்பட்டில் ஜே.ஆா். மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இவற்றுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
மருத்துவ கல்லூரிகளை துவக்குவதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியிருக்கிறது. அதன்படி, அனைத்துப் பிரிவுகளிலும் சிகிச்சை அளித்து, அனைத்துத் துறை மருத்துவர்களையும் கொண்டிருந்தால், முதற்கட்டமாக 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையுடன் மருத்துவமனை தொடங்கலாம். அவ்வாறு மருத்துவமனையில் குறைந்தது 200 படுக்கை வசதி, 20 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கை வசதி இருக்க வேண்டும்.
நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் இதுவரை 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது வழங்கப்பட்டிருக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையின்படி மொத்தம் 800ஐ எட்டிவிடும். இதில், 50 தான் அரசு மருத்துவக் கல்லூரியாகவும், மற்றவை தனியார் மற்றும் தன்னாட்சிப் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் ஆகும்.