#ManmohanSingh-கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதி!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க, இடம் ஒதுக்குவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு 9.51 மணியளவில் காலமானார். மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது” – #ManmohanSingh மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்!
அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி இருந்தார்.
நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க அரசு இடம் ஒதுக்கும் என அவரது குடும்பத்தினரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.