குவைத் செல்ல கேரள அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு அனுமதி தராத மத்திய அரசு...வெடிக்கும் புதிய சர்ச்சை!
குவைத் செல்ல கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு, மத்திய பாஜக அரசு அனுமதி மறுத்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த 24 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். குவைத் தீ வீபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தீவிபத்து குறித்து தகவல்கள் வெளியான உடனே மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்று இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவருவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். மேலும் குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை சந்தித்து ஆறுதலும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜும் கேரளா செல்வார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நெடும்பசேரி விமான நிலையத்துக்கு வீணா ஜார்ஜ் மற்றும் தேசிய சுகாதாரத் துறையின் மாநில இயக்குநர் ஜீவன் பாபு ஐஏஎஸ் ஆகியோர் சென்றிருந்தனர். ஆனால் மத்திய அரசானது கேரளா மாநில அமைச்சர் வீணா ஜார்ஜின் குவைத் பயணத்திற்கு அனுமதி தரவில்லை.
இதனால் குவைத் செல்லாமல் திரும்பிய அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி தராதது தவறான முன்னுதாரணம். கேரளா மாநிலம் பெருந்துயரமான சூழ்நிலையில் இருக்கும் நிலையில் மத்திய அரசின் இந்தப் போக்கு மிகவும் கடுமையான அதிருப்தியை தருகிறது” என தெரிவித்துள்ளார்.