"இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.
இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் எக்ஸ் தளத்தில், “இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியாவும் – பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்பக்கொண்டன. இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சூழ்நிலையை புரிந்து கொண்டு தாக்குதலை கைவிட்ட இரு நாடுகளுக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.
Tamil Nadu marched in solidarity with the #IndianArmedForces.
The ceasefire is a welcome step — may peace endure. Our heartfelt salute to the courage of those who guard our borders.@adgpi @HQ_IDS_India @DefenceMinIndia pic.twitter.com/T6YoIiNmwO
— M.K.Stalin (@mkstalin) May 10, 2025
இதனையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இந்த நிலையில், தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பளித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "இந்திய ஆயுதப்படைகளுடன் ஒற்றுமையுடன் தமிழ்நாடு அணிவகுத்துச் சென்றது.. போர் நிறுத்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கை - அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த வணக்கம்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.