ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!
வீட்டிற்கு அருகில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு நான்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவரிடம் வெங்கடேசன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். குடியிருப்பு பகுதியில் வெங்கடேசன் மது அருந்தியதாகவும் அதை, செந்தில்குமாரின் உறவினரும் பாஜக பிரமுகருமான மோகன்ராஜ் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : “நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசல்ல.. வெறும் தரிசு..” - கடலூரில் சீமான் பரப்புரை!
இந்நிலையில் செந்தில்குமார், அவருடைய உறவினர்கள் மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் வெங்கடேசன் உள்ளிட்ட மூவர் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும், கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அதன் பின்னர், கொலை செய்தவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக வெங்கடேஷ் என்பவரை போலீசார் கால் முட்டியில் சுட்டு பிடித்தனர். பின்னர் இவருக்கு கோவையில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்,இந்த வழக்கை விசாரித்த
காவல்துறையினர் 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்தனர்.
இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கள்ளக்கிணறு கொலை வழக்கில் நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பு வழங்கினார். இதில், ராஜ்குமார், செல்லமுத்து, சோனை முத்தையா மற்றும் அய்யப்பன் ஆகியோருக்கு தலா 4 ஆயுள் தண்டனைகளும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய 5 வது குற்றவாளி வெங்கடேஷ்க்கு இரண்டு 3 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.