”டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டரின் பெயரை கவனக்குறைவாக மொழி பெயர்த்திருப்பது கண்டனத்துக் குரியது”- அண்ணாமலை!
தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம், இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.
அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை,
"It Begged the United Nations award" - பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.