கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்த கார்! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்!
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரிக்குள் காருடன் விழுந்த 2 இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மையப் பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். கொடைக்கானலில் இதய பகுதியாக இருக்கக்கூடிய ஏரி எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய பகுதியாகும்.
இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை பகுதியான புதுப்புத்தூர் பகுதியில் இருந்து
கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக குடும்பத்தினருடன் காளிமுத்து மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஆறு பேர் வந்துள்ளனர். இதில் 2 கர்பிணிகள் இருந்துள்ளனர். இவர்களுக்கு பரிசோதனை முடிந்த பிறகு மருத்துவ அறிக்கை கிடைப்பதற்கு சிறிது நேரம் ஆகும் என்று மருத்துவமனையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் காத்திருக்காமல் ஏரி சாலையில் காளிமுத்து மற்றும் ஜெயபிரகாஷ் மட்டும் காரை வேகமாக இயக்கியவாறு வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட ஸ்வாரஸ்யமான ‘சுங்கச்சாவடி – மாம்பழம்’ கேள்வி!
அப்போது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை இடித்து கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் வாகனம் பாய்ந்துள்ளது. இதில் சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால் ஏரியில் வாகனம் விழுந்தது. வாகனத்தில் இருந்த ஜெயபிரகாஷ் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தை வைத்து ஏரிக்குள் விழுந்த வாகனத்தை மீட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த பெண் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.