கட்டுப்பாட்டை இழந்து பூக்கடைக்குள் புகுந்த கார்!
திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் பூக்கடைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (55). இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஈரோடு அருகே உள்ள கூடுதுறை பவானீஸ்வரர் கோயிலுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே சேயூர் சாலை சந்திப்பில் ரெட் சிக்னல் விழுந்ததை அடுத்து கண்ணன் தனது காரை நிறுத்தினார்.
பின்னர் கிரீன் சிக்னல் விழுந்தும் கண்ணன் தனது காரை எடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் அவருடைய காருக்கு பின்னால் இருந்த மற்ற வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடித்தனர். இதனால், பதட்டமடைந்த கண்ணன் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தினார்.
இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பூக்கடைக்குள் வேகமாக புகுந்தது. இந்த விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி இளைஞரும், பூக்கடையில் அமர்ந்திருந்த இளைஞரும் நூலிலையில் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.