புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்! இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
புதுச்சேரியில் வீட்டின் அருகே சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து மார்ச் 5 ஆம் தேதி சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள் : விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறேன் – நடிகை ராஷ்மிகா!
சிறுமியை கொலை செய்ததை கருணாஸ் (19) என்ற இளைஞர் மற்றும் விவேகானந்தன் (57) என்ற முதியவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததில், அதிர்ச்சி அடைந்த சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வாய்காலுக்குள் சிறுமியின் உடலை போட்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தி இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. மருத்துவமனையில் சிறுமியின் உடலை வாங்க மறுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடந்து, சிறுமியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, உறவினர்கள்,சிறுமியுடன் பள்ளியில் பயின்ற சக மாணவர்கள், அரசியில் பிரமுகர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சிறுமியின் உடலுக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், சிறுமியின் உடல் ஊர்வலமாக சோலை நகர் பகுதியில் உள்ள பாப்பம்மாள் திருக்காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள், அரசியில் பிரமுகர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள், அரசியில் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவரும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க வழி நெடுக்கிலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் விக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர். பின்னர் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.