பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதனை அரசு உறுதி செய்யவில்லை. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்குமோ என இந்திய அரசு சந்தேகித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் அரசும் அனைத்து இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது. இதனால் போருக்கான பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே உயிரிழந்தவர்களின் உடல்கள் ஸ்ரீநகருக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோரின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள இஷானி கிராமத்தில், ஒன்பது வயது தனுஜ் குமார் சத்பதி தனது தந்தை பிரசாந்தின் உடலுக்கு நெருப்பு (சிதை) வைத்தார். முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் பாலசோர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் தனுஜுடன் அவரது வீட்டிலிருந்து தகன மேடைக்குச் சென்றவர்களில் அடங்குவர்.
குஜராத்தில் மூன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பாவ்நகர் நகரத்தைச் சேர்ந்த யதீஷ் பர்மர் மற்றும் அவரது மகன் ஸ்மித் மற்றும் சூரத்தை சேர்ந்த ஷைலேஷ் கலாதியா. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், வியாழக்கிழமை காலை உடல்கள் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, கலியாபிட் பகுதியில் உள்ள யதீஷ் மற்றும் ஸ்மித் பர்மாரின் இல்லத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான தொழிலதிபர் சுபம் திவேதிக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.