“ஆளுநர் ரவி போன்ற நபர்கள்தான் பாஜகவிற்கு தேவைப்படுகிறார்கள்”- திருமாவளவன்!
“ஆளுநர் ஆர்.என். ரவி போன்ற நபர்கள்தான் பாஜகவிற்கு தேவைப்படுகிறார்கள்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம். பொங்கல் வாழ்த்துகளையும் முன்கூட்டியே தெரிவித்துள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு தமிழக அரசு அண்ணல் அம்பேத்கர் விருது அளித்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைக் கட்சி சார்பில் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
ஆளுநர் உரை ஆளுநரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் சொல்லும் காரணம் வியப்பாக இருக்கிறது. ஆளுநர் பொறுப்பேற்றதிலிருந்து திமுக அரசுக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார். தொடர்ந்து பரபரப்பான ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
தமிழ்நாடு மரபுபடி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி நிறைவு பெறும்
வேளையில் தேசிய கீதம் இடம்பெறும் என்பதை நாம் கடைபிடித்து வருகிறோம். இது அனைத்தும் அறிந்ததே.
ஆனால் இந்த மரபை மாற்றும் படி ஆளுநர் செய்திருப்பது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபுகளை மதிக்கும்படி அவர் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர், “அரசியலமைப்பு சட்டத்தை, தேசிய கீதத்தை சட்டமன்றத்தில் அவமதித்து விட்டோம்” எனக்கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
தேசிய கீதத்தை இறுதியாக தான் நிகழ்த்தி வருகிறோம் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் அதனைத் தெரிந்துதான் செய்கிறாரா அல்லது தெரியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலை விவகாரத்தை அரசியல் ஆக்க நினைப்பது ஏற்புடையதல்ல. இது அந்த பெண்ணுக்கு எதிரானது. அண்ணா பல்கலைக்கழக விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் மீதும், தமிழ்நாடு காவல்துறை மீதும் மீண்டும் குற்ற
சுமத்துவது ஆதாயத்திற்கான அரசியல் செயல். அரசுடன் நாங்கள் தோழமைக் கட்சியாக தான் செயல்பட்டு வருகிறோம். அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கூறும் கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆளுங்கட்சியிடம் சுட்டிக்காட்ட வேண்டிய விஷயங்களை சுட்டிக்காட்டி இருக்கிறோம். அது தோழமைக் கட்சி உடன் இருக்கின்ற சுதந்திரம் என்பதை நாங்கள் பதிவு
செய்திருக்கிறோம்.
கூட்டணி என்கின்ற விஷயத்தில் ஆளும் கட்சி எந்த விதத்திலும் எங்களுடைய குரலில் தலையிட்டது கிடையாது. ஆளுநர் திட்டமிட்டு தான் இந்த செயலை செய்திருக்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி போன்ற நபர்கள்தான் பாஜகவிற்கு தேவைப்படுகிறார்கள். பாஜக அல்லாத பிற கட்சி ஆளும் மாநிலங்களில் இது போன்ற தலைவலி ஆளுநர்களை தான் நியமித்து வருகிறார்கள். திமுக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக எண்ணி ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இது மக்களுடைய உணர்வுகளை அவமதிப்பதாகும், ஏற்புடையதல்ல.” என தெரிவித்தார்.